×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

537. மேதினீபதயே நமஹ (Medhineepathaye Namaha)

துருவ மகாராஜாவின் வம்சத்திலே அங்கன் என்ற மகாராஜா தோன்றினார். அவர் துருவனைப் போலவே நல்லொழுக்கம் கொண்டவராகவும், மிகவும் புகழ் பெற்றவராகவும் விளங்கினார். அவருக்கு சுனீதா என்ற மனைவி இருந்தாள். அங்கனுக்கும் சுனீதாவுக்கும் வேனன் என்ற மகன் பிறந்தான். இந்த வேனன் இளமைக்காலம் முதலே தீய ஒழுக்கம் கொண்டவனாக இருந்தான், நல்லோர்களைத் துன்புறுத்திவந்தான். இப்படித் தவறு செய்துவந்த தன் மகன் அங்கனைப் பார்த்து வேனன், நம் குல முன்னோர்கள் எவ்வளவு உயர்ந்த நல்லொழுக்கத்தையும் நன்னெறிகளையும் கடைப்பிடித்து வந்தார்கள். அவர்களின் பெருமைக்கு இழுக்கு நேரும்படி நீ இப்படித் தவறுகள் செய்யலாமா, வேண்டாம். திருந்தி வாழ்வாயாக என்றெல்லாம் அறிவுரை கூறினான். ஆனால் வேனன் இவற்றை எல்லாம் கேட்பதாகத் தெரியவில்லை.

மகனை நினைத்து மனம் வருந்திய அங்க மகாராஜா, காட்டுக்குச் சென்று துறவறம் மேற்கொண்டார். இப்பொழுது நாட்டை ஆள மன்னரே இல்லாமல் போனது. பிருகு முனிவர் உட்பட மற்ற முனிவர்களும் மகாராணி சுனீதாவைச் சந்தித்தனர். காட்டுக்குச் சென்ற அங்க மகாராஜாவின் மனநிலை எங்களுக்குப் புரிகிறது, ஆனால் நாட்டுக்கு ஒரு ராஜா வேண்டும், உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு மகன் தான். ஆதலால் வேனனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.

மகாராணி சுனீதாவும் அதற்கு இசைந்தாள். வேனனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது. ஆட்சியில் அமர்ந்த வேனன், அப்பாவி மக்களுக்கு வரி விதித்தான், இயற்கை வளங்களைச் சுரண்டினான், முனிவர்களைத் துன்புறுத்தினான், வேதம் சொல்லத் தடை விதித்தான், தீயவர்களை நன்றாக வாழ வைத்தான். இப்படி பூமிக்குப் பலவிதத்திலே தொல்லை கொடுத்தான் வேன ராஜா.

பொறுமைக்குப் பெயர் போன பூமிதேவியே ஒரு கட்டத்தில் தன்னிடம் உள்ள கனிம வளங்கள், இயற்கை வளங்கள், நிலவளம், நீர் வளங்களை மறைத்துக்கொண்டாள். இப்பொழுது முனிவர்கள் அனைவரும் கோபம்கொண்டு தங்களின் தவ சக்தி என்னும் தீயை வேனன் மீது ஏவினார்கள். அந்த அக்னியில் எரிந்து வேனன் மாண்டுபோனான்.இப்பொழுது அடுத்த ராஜா யார் என்ற கேள்வி வந்தது. முனிவர்கள் பிரம்மாவின் உதவியை நாடினார்கள். அப்போது பிரம்மா அவர்களுக்கு வழி சொன்னார் – முனிவர்களே, லோக ஷேமத்துக்காகப் பாதாள லோகத்தில் கபில வாசுதேவர் தவம் புரிகிறார். கபிலரின் உதவியை நாடுங்கள். அவர் வழி சொல்வார் என்று பிரம்மாஅறிவுறுத்தினார்.

கபிலரின் உதவியை முனிவர்கள் நாட, நீங்கள் வேனனின் உடலை அவன் தாயிடம் இருந்து வாங்கி அவனது கையைக் கடையுங்கள். அதிலிருந்து பகவானின் அம்சாவதாரமாக ப்ருது என்பவரும் மஹாலட்சுமியும் அம்சமாக அர்சிஸ் என்பவளும் தோன்றுவார்கள் எனக் கூறினார்.அவ்வாறே முனிவர்களும் வேனனின் உடலைக் கடைய, ப்ருது சக்ரவர்த்தியும் அர்சிஸ்ஸும் தோன்றினார்கள். வேனனின் கொடுங்கோல் ஆட்சியால் கோபம்கொண்ட பூமிதேவி, பசு வடிவில் ஒளிந்திருந்தாள். அவளிடம் சென்ற ப்ருது சக்கரவர்த்தி, மீண்டும் வளங்களைச் சுரக்க வேண்டும் என்று கேட்டார். பகவானே கேட்பதால் பூமியால் மறுக்க முடியவில்லை.

நான் மீண்டும் வளங்களைச் சுரக்கிறேன், ஆனால் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அதனை யாரும் அழிக்கவோ, சுரண்டவோ கூடாது, அதனை அழித்தால் என்ன ஆகும் எனக் காண்பிக்கவே நான் வளங்களை மறைத்துக் கொண்டேன் என்று சொன்னாள் பூமிதேவி. பின் பசு வடிவில் இருந்த பூமியிடம் இருந்து வளங்களை எல்லாம் கறந்தார் ப்ருது. ப்ருது சக்கரவர்த்தி பூமியிடம் இருந்து வளங்களைக் கடைந்து எடுத்ததால் தான் பூமி தேவி ப்ருத்வீ எனப் பெயர் பெற்றாள்.

இப்படிப் பூமியில் எல்லா வளங்களும் நிறைய வேண்டும் எனப் பாதாளத்தில் உலக நன்மைக்காக தவம் புரிந்தும், அறிவுரைகளை வழங்கியும் உலகத்தைப் பாதுகாக்கும் கபில வாசுதேவர் மேதினீபதி என அழைக்கப்படுகிறார். மேதினீ – பூமி, பதி – தலைவர், மேதினீபதி – பூமிக்குத் தலைவர்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 537-வது திருநாமம்.“மேதினீபதயே நமஹ’’ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு எல்லா வளங்களும் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

538. த்ரிபதாய நமஹ (Tripadhaaya Namaha)

(538-வது திருநாமம் முதல் அடுத்த சில திருநாமங்கள் வராக அவதார வைபவம்)பிரளயக் காலத்தில் பிரளயக் கடல் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்து விடும். அந்தப் பிரளயக் கடலுக்குள் பூமியை மறைத்து வைத்து விட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். பிரளயக் கடலுக்குள் பூமி சிக்குண்டு விட்டதால், பிரம்மாவால் மேற்கொண்டு உலகில் உயிர்களைப் படைக்க முடியாத நிலை ஏற்பட்டது. திருமாலே நாராயணா நீதான் பூமியை மீட்டுத் தர வேண்டும் என்று திருமாலிடம் வேண்டினார் பிரம்மா.

பிரம்மாவின் மூக்குத் துவாரத்தில் இருந்து ஒரு பன்றி வெளியே வந்து குதித்தது. அந்தப் பன்றி வேறுயாரும் அன்று, சாட்சாத் திருமாலே உலகைக் காப்பதற்காகப் பன்றி வடிவம் எடுத்து வராக மூர்த்தியாகத் தோன்றியுள்ளார். அந்த வராகப் பெருமாள் கிடுகிடுவென மலையளவு வளர்ந்து மஹாவராகனாக விளங்கினார். அந்த வராக மூர்த்தியின் திருமேனியிலேயே வேள்விகள், யாகங்கள், வேதப் பகுதிகள் அனைத்தும் இருந்தன. அதனால், அவரை யக்ஞ வராகன் என்று முனிவர்கள் அழைத்தனர். வராகப் பெருமாள் பிரளயக் கடலுக்குள் சென்று ஒரு பன்றி எப்படி தனது கோரைப் பற்களால் கிழங்கை கொத்தி எடுக்குமோ அதைப்போல் பூமியை மீட்டு வந்தார். அவரைத் தடுக்கப் பார்த்த ஹிரண்யாட்சனையும் அழித்தொழித்தார். அதன்பின் பிரம்மா பழையபடி உலகின் படைப்புத் தொழிலைநடத்தத் தொடங்கினார்.

இப்படிப் பூமியை மீட்டுத் தந்த வராகப் பெருமானுக்கு ரிஷிகள் எல்லாரும் பல்லாண்டு பாடினர். மூன்று வேதங்களையும், யாக யக்ஞங்களையும் உன் சரீரமாகக் கொண்டிருப்பவனே, உனக்குப் பல்லாண்டு என்று பாடினர் முனிவர்கள். வேதங்களின் எந்தெந்தப் பகுதிகள் வராகனின் திருமேனியில் எந்தெந்த அங்கங்களாக இருந்தன என்பதை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணித்துள்ளார்.

வராகப் பெருமானின் தோளாக காயத்ரி மந்திரம் இருக்கிறது, ரோமங்களாகத் தர்பைப் புல் இருக்கிறது, கண்களாக நெய் இருக்கிறது, அவரின் உதடாக சிருக் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, மூக்காக சிரவம் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, இடா என்னும் பாத்திரம் அவரின் வயிறாக இருக்கிறது, சமசம் என்னும் பாத்திரம் அவரின் காதுகளாக இருக்கிறது, அவரின் நாவிலே சோம பாத்திரம் இருக்கிறது, பலப்பல யாகங்களே அவருக்குப் பற்களாக இருக்கிறது, கோரைப் பல்லாக யாகத்தின் யூபஸ்தம்பம் இருக்கிறது. வராகப் பெருமாள் நாக்கை வெளியே நீட்டினால் யாகத்தின் அக்னி ஜுவாலை வெளியே வரும்.

இத்தகைய திருமேனி படைத்த வராகப் பெருமானின் முதுகிலே மூன்று திமில்கள் உண்டு. அந்தத் திமில்கள் ஓம்காரமாகிய பிரணவத்தில் இருக்கும் மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. ஓம் என்னும் பிரணவத்தை அ, உ, ம என்று மூன்று எழுத்துகளாகப் பிரிப்பார்கள்.அவற்றுள் அ என்பது பராமாத்வைக் குறிக்கிறது, ம என்பது ஜீவாத்மாவைக் குறிக்கிறது, உ என்பது பரமாத்மாவுக்கே ஜீவாத்மா தொண்டன் எனக் காட்டுகிறது.

இத்தத்துவத்தை உணர்த்தும் ஓம் என்னும் பிரணவம் வேதங்களிலும், வேள்விகளிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், அந்த வேதங்களையும் யாகங்களையும் தனது திருமேனியாகக் கொண்டிருக்கும் வராகப் பெருமாள், பிரணவத்தை தனது முதுகில் மூன்று திமில்களாகக் கொண்டிருக்கிறார்.த்ரிபத என்றால் மூன்று திமில்களை உடையவர் என்று பொருள். பிரணவத்தில் உள்ள மூன்று எழுத்துக்களைக் குறிக்கும் மூன்று திமில்களை முதுகிலே கொண்டிருக்கும் வராகப் பெருமாள் த்ரிபத என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-வது திருநாமம்“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் பிரணவத்தின் ஆழ்பொருளை உணரும் ஞானநிலையை ஞானப் பிரானாகிய வராகமூர்த்தி நமக்குத் தந்தருள்வார்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Tags : Anantan ,Kunkum ,Anmikam ,Medhineepathaye ,Namaha Maharaja Angan ,Dhruva Maharaja.… ,Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்